திருவண்ணாமலை: நாம் தமிழர் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (அக். 22) போளூரில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக, திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டம் முடிந்து சென்றவுடன் விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது மற்றொரு நிகழ்ச்சிக்கு சென்ற சீமான் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்.
இதன் இடையே செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், "திமுக தற்போது நடத்தும் கையெழுத்து இயக்கத்தால், என்ன பயன் இருக்கிறது. தமிழகத்தில் இதை போல் பல கையெழுத்து இயக்கம் நடைபெற்று உள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. காங்கிரஸ் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. அப்போது திமுக அரசு கையெழுத்து போட்டு ஆதரவு அளித்தது.
தேர்தல் வரும் போது தான் நம் பிள்ளைகள் மீது திமுக அரசிற்கு பாசம் வரும். காவிரியில் தண்ணீர் தரவில்லை என்றாலும், நீட்டை காங்கிரஸ் ஆதரித்தாலும் திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொள்ளும். தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. நீட் தேர்வை எதிர்த்து கையழுத்து இயக்கம் தொடங்குகிறார்கள். இதை மத்திய அரசிடம் தான் கொடுப்பார்கள். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா.
இதையும் படிங்க: திருவண்ணாமலை தான் திமுகவுக்கு திரும்பம் தந்தது.. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் இரண்டும் மாறி மாறி ஊழல் செய்து மக்களை முட்டாளாக்குகின்றன. இந்தியாவின் தேர்தல் முறைகளை அமெரிக்கா, ஜப்பான் போன்று மாற்றி அமைக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடைபெறுவதால் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும்.
தமிழக மக்கள் யாருமே இலவசம் வேண்டும் என்று இதுவரை கேட்டதில்லை. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற குறுக்கு எண்ணத்தில் மக்களுக்கு இலவசங்களை கொடுத்து அடிமையாக்குகின்றனர். இங்கு இல்லாத வளங்கள் எங்கும் இல்லை. செழிப்பாய் இருக்கும் நம் மக்களுக்கு இலவசம் என ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்துள்ளனர்.
அதேபோல் அறிவை வளர்க்கும் கல்வியையும், உயிரைக் காக்கும் மருத்துவமும் முறையாக மக்களுக்கு தரவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செயல்படுத்துவோம். 100 நாள் வேலையால் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் 100 நாள் பணிகள் தேவையில்லை" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்; வேறு மாநிலங்களில் வேண்டுமானால் இருக்கட்டும்: ப.சிதம்பரம் கருத்து!