திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருபவர் ஆனந்தன். இவரது வீடு திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள ரமணா நகர் பகுதியிலுள்ளது. இந்தநிலையில், இவரது வீட்டின் மீது நேற்றிரவு (ஏப்.26) நான்கு நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு தீப்பிடிக்காததால், எவ்வித பாதிப்பு இன்றி பாஜக நிர்வாகி ஆனந்தன் உயிர் தப்பினார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுண் காவல் நிலையத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தன் இன்று(ஏப்.27) புகார் அளித்தார்.
அப்புகாரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாஜக மாநில வர்த்தக அணி தலைவரும், திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளருமான தணிகைவேல் என்பவருடன் கட்சி ரீதியாக நட்பு ஏற்பட்டு சிறு சிறு தொகையாக ரூபாய் 28 லட்சம் கடன் கொடுத்துள்ளேன்.
இந்த நிலையில் பாஜக வேட்பாளராக தணிகைவேல் அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்குப் பின்னர் பணம் கொடுப்பதாக கூறினார். தேர்தல் முடிந்து அப்பணத்தை கேட்டதால் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு (ஏப்.26) நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கதவு தட்டும் சத்தம் கேட்டது. அப்போது வெளியே வந்து பார்த்தப்போது, திருவண்ணாமலை அண்ணா நகர் 8ஆவது தெருவைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி அஜித்குமார், சதீஷ்குமார் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் என்னை ஆபாசமாக பேசினர்.
'தணிகைவேல் அண்ணன் கிட்ட கொடுத்த பணத்தைக் கேட்டு அசிங்கப்படுத்தினாயா?' எனக் கூறி சரமாரியாக தாக்கிவிட்டு, கையில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டிலை வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
எனவே பாஜக வேட்பாளரின் தூண்டுதலின் பேரில்தான் இது நடந்துள்ளது. இதற்கு காரணமான அண்ணா நகர் 8வது தெருவைச் சேர்ந்த அஜித்குமார், ஆணாய் பிறந்தான் கிராமத்தில் வசிக்கும் பாஜக பிரமுகர் சதீஷ்குமார், தாமரை நகர் பகுதியைச் சேர்ந்த பாபு மற்றும் பாஜக வேட்பாளர் தணிகைவேல் ஆகிய 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'எனக் கோரியுள்ளார்.
இது குறித்து டவுண் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அஜித்குமார், சதீஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர் . மேலும் தலைமறைவாக உள்ள பாஜக வேட்பாளர் தணிகைவேல் ,பாபு ஆகியோரை தேடி வருகின்றனர்.