திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர், மூதாட்டி சின்னக்குழந்தை. இவர் தனது உடல் நிலை சரியில்லாததால் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். பின் மூதாட்டி அணிந்திருந்த நகையை நோட்டமிட்ட சந்தேகத்திற்குரிய நபர், அவரைப் பின் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். மூதாட்டி சின்னக் குழந்தைக்கு அவர் தூரத்து உறவினர் எனக் கூறி, அவருக்கு மாத்திரை வாங்கிக் கொடுத்து உதவுவது போல் நடித்துள்ளார்.
அப்போது, மூதாட்டியிடம் மயக்க மாத்திரையைக் கொடுத்து, மயக்கமடையச் செய்து, அவர் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மூதாட்டி மயக்க நிலையை அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்குச் சென்ற மூதாட்டி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில், செங்கம் அரசு மருத்துவமனை அருகில் சின்னக்குழந்தை மயக்கநிலையில் இருந்தது தெரியவந்தது.
பின்னர், அவரை மீட்டு மயக்கம் தெளிய வைத்து விசாரித்த போது, ஒருவர் தனது தூரத்து உறவினர் போல் நடித்து, தூக்க மாத்திரை கொடுத்து தான் அணிந்திருந்த நகைகளைத் திருடிச் சென்று விட்டதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, செங்கம் காவல் நிலையத்தில் மூதாட்டி சின்னக்குழந்தை, இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளியிடம், மயக்க மருந்து கொடுத்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், செங்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து சில நாட்களாக மூதாட்டிகளைக் குறிவைத்து உறவினர்கள் போல் நடித்து மயக்க மருந்து கொடுத்து, நூதன கொள்ளையில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டினை வைத்தனர்.
இதையும் படிங்க: கொரோனாவால், இனி அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புகள்