திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த கீக்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 130க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே நேற்று (ஆகஸ்ட் 22) வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்களின் உறவினர்கள், செவரபூண்டியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி விட்டு சைக்கிளில் தங்களது வீடுகளுக்குச் சென்று கொண்டிருக்கும்போது, நான்கு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து, நேற்று மாலை (ஆகஸ்ட் 22) அரசு பேருந்தைச் சிறை பிடித்து சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) செவரப்பூண்டியைச் சார்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் 35 பேர் கீக்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்களது பிள்ளைகளின் டிசியை வழங்குமாறு கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Chandrayaan-3 : நிலவில் தடம் பதிக்கும் முன் நாமக்கல் மண்ணில் தடம் பதித்த சந்திராயன்-3
இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் கீக்களூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களின் உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களின் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்த பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஒரே நேரத்தில் 35 மாணவர்களின் டிசியை பெற்றோர்கள் வழங்க வலியுறுத்தி இருப்பது திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பள்ளி மாணவர்களின் படிப்பு வீணாவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மூன்றாம் பாலினத்தவருக்கு உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!