திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவி, கோழிப்பண்ணை நடத்திவருகிறார். இவர் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்த்துவந்தார்.
இந்நிலையில், பறவைக்காய்ச்சல், கோவிட்-19 ஆகியவைகளால் கோழிக்கறி சாப்பிடுவதில் மக்கள் அச்சம் காட்டிவருகின்றனர். இதனால், கோழிகளின் விற்பனை விலை படிப்படியாகக் குறைந்து ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டதால் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துவருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான ரவி, திடீரென்று நேற்று இரவு, தான் வளர்த்த அனைத்து கோழிகளையும் உயிருடன் மூட்டை மூட்டையாகக் கட்டி பள்ளம்தோண்டி புதைத்துக் கொண்டிருந்தார்.
இந்தத் தகவலை அறிந்த பொதுமக்கள், கோழிப்பண்ணை முன்பு குவியத் தொடங்கினர். சிக்கன் பிரியர்கள், 'அந்தக் கோழிகளை எங்களிடமாவது தாருங்கள்' எனக் கேட்டுப் பார்த்தனர். இருப்பினும் அவர் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் உள்ளதால் யாருக்கும் தரமுடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: யூ-ட்யூப் பார்த்து இளம்பெண்ணுக்குப் பிரசவம்... இறந்து பிறந்த குழந்தை: காதலன் கைது