திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் தனியார் கார் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள ஏரியில் விவசாயக்கூலிகள் ஆடு மேய்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஏரிக்கரை ஓரத்தில் முள் புதருக்குள் யாரே இருப்பதைக்கண்ட அவர்கள், முட்புதறின் அருகில் சென்றனர். இதைக்கண்ட அங்கிருந்த நான்கு பேர், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். எதற்கு இப்படி ஓடுகிறார்கள் என்று தெரியாமல் முட்புதறின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பள்ளம் தோண்டி இளைஞரின் சடலம் பாதி புதைத்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, டி.எஸ்.பி. கங்காதரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்த இளைஞரின் சடலத்தை பார்க்கும்போது அடித்து கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? கொலையாளிகள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். தனியார் கார் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள ஏரியில் நடைபெற்ற இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.