ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி முன்பு புதிதாக ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் 40 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன முருகன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்காக செங்கல்பட்டை அடுத்த சிறுதாமூர் மலையிலிருந்து சுமார் 320 டன் எடை கொண்ட கருங்கல் ராட்சத வாகனம் மூலம் தண்டலத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை ஒரு வருடமாக மகாபலிபுரம் பாஸ்கர் ஸ்தபதியும் அவரின் குழுவினரும் சேர்ந்து செதுக்கி 180 டன் எடையில் 40 அடி உயரத்திற்கு முருகன் சிலையை வடித்துள்ளனர்.
முருகனின் சிலை பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் 180 டன் எடை கொண்ட முருகன் சிலை ராட்த கிரேன் மூலம் சுமார் 30 அடி குன்றின் மீது பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்டது.
உலகிலேயே 40 அடியில் ஒரே கல்லால் ஆன முருகன் சிலை இதுவாகும். இதனால் இதனை காண தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து முருக பக்தர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் வந்திருந்தனர். முன்னதாக பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ - திருச்செந்தூரில் முழங்கிய பக்தர்கள்!