சென்னை: திருவள்ளூர் மாவட்டம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ராணி (40), போரூரில் உள்ள ஷூ நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். இவர், தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னை கே.கே. நகர் 4ஆவது செக்டாரில் வசித்துவரும் தனது அண்ணன் மணிகண்டன் வீட்டில் தங்கினார்.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 30) இரவு ராணி வீட்டு மாடியில் கொடி கயிற்றில் காயவைத்த துணிகளை எடுப்பதற்காக மாடிக்குச் சென்றார். பின்னர் கொடிக் கயிற்றில் இருந்த துணிகளை கையில் இழுத்தபோது கொடிக் கம்பி கயிறு கட்டிருந்த தூண் திடீரென ராணி தலையில் விழுந்தது.
இதில் படுகாயமடைந்த ராணியை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு ராணியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கே.கே. நகர் காவல் துறையினர் ராணியின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கார் மோதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி - பொதுமக்கள் சாலை மறியல்