காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன்(39). இவர் வாடகை கார் ஓட்டிவந்துள்ளார். இவருக்கும் பவானி(31) என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், தரணிதரன் கடந்த 22ஆம் தேதி கடன்தொல்லையால் தனக்குத்தானே கழுத்தை இறுக்கிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக பவானி பூந்தமல்லி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வநத் காவலர்கள் தரணிதரனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதி, பவானியிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பேச அவருடைய செல்போனை சோதனை செய்துள்ளனர். அதில், பவானி ஒரு எண்ணுக்கு அடிக்கடி தொடர்புகொண்டு பேசியுள்ளார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பவானியிடம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொள்ள தனது கணவரின் நண்பர் தினேஷ் என்பவருடன் இணைந்து தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
மற்றொரு வாடகை கார் ஓட்டுநரான தினேஷ் அடிக்கடி தரணிதரனின் வீட்டிற்கு வரும்போது பவானியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பவானிக்கும் இவருக்கும் திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு தடையாக இருந்த தரணிதரனை இருவரும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தரணிதரன் இறப்பதற்கு முதல்நாள் அவரது மனைவி, அவருக்கு விஷம் கலந்து கொடுத்துள்ளார். இருந்தபோதிலும், அவர் உயிரிழக்காததால் தினேஷுடன் இணைந்து ஜூலை 22ஆம் தேதி தரணிதரனின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்துக் கொலை செய்துள்ளார். இவையனைத்தும் விசாரணையில் தெரியவர இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கலர் கலரான போதை மாத்திரைகள் பறிமுதல்!