திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவ முஸ்லிம் மகளிர் சங்கங்கள் மற்றும் உலமாக்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் சாமு நாசர் மற்றும் செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் பங்கேற்று தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி மிதிவண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செஞ்சி மஸ்தான், கரோனா காலத்தில் தன்னுடைய வாழ்வாதாரத்தை இழந்த வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் மானியத்துடன் கூடிய 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
வெளிநாடு செல்பவர்களுக்கு துறை சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் திறமைக்கு ஏற்றார் போல் பணிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பத்தரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேவாலயம் மற்றும் மசூதி சொத்துக்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எதுவும் வரவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் நாலு சதவீத சிறுபான்மையின மக்கள் வாழ்ந்து வருவகின்றனர். அவர்களின் நலனைக் காக்க அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே சிறுபான்மை நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது. ஒருவர் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம் எனவும் தெரிவித்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி சந்திரன் ராஜேந்திரன் மற்றும் கிறிஸ்தவ முஸ்லிம் சிறுபான்மை மகளிர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு...சிசிடிவி காட்சி வெளியீடு