திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு ஆறு கரும்பு கோட்ட அலுவலகங்களிலிருந்து மூன்று ஆயிரம் விவசாயிகள், கரும்பு அறவைக்குத் தங்கள் கரும்புகளை அனுப்புகின்றனர்.
இந்நிலையில், சில நாட்களாக விவசாயிகள் லாரி, டிராக்டர் மூலம் ஆலைக்குக் கொண்டுவரும் கரும்புகளை உடனடியாக இறக்காமல், அலுவலர்கள் மூன்று நாட்களாகக் காத்திருக்க வைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் பல வழிகளில் நஷ்டம் அடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆலை நிர்வாக அலுவலர் கூறுகையில், "ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2,400 டன் கரும்பைத்தான் எடுக்க முடியும். ஆகையால் கரும்பு இறக்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது" என்றார்.
பின்னர் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "ஆலை நிர்வாகத்திடம் உரிய முறையில் கட்டிங் ஆர்டர் பெற்று, கரும்புகளை அனுப்பும்போது திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளிலிருந்து வரும் கரும்பு என்றாலே மூன்று நாட்கள் கழித்துத்தான் இறக்குகின்றனர்.
அதே நேரத்தில் அரக்கோணம் சாலை, பேரம்பாக்கம் பகுதிகளிலிருந்து வரும் கரும்புகளை மட்டும் 24 மணி நேரத்திற்குள் இறக்கி விடுகின்றனர். இதுகுறித்து நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது திருத்தணி வருவாய் கோட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு 100 டன் தான் எடுக்க வேண்டும் என்றும், மீதமுள்ள இடங்களிலிருந்து வரும் கரும்புகள் 200 டன் தான் எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். இதனால் மூன்று நாட்கள் பட்டினியுடன் காத்திருந்து கரும்புகளை இறக்குகிறோம்" என வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 5 புதிய மாவட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கும் நாள், நேரம் அறிவிப்பு!