திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்திலுள்ள எஸ்பிபியின் நினைவிடத்தில் இரண்டாவது நாளாக ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் பொதுமக்களுக்கு நினைவிடத்தைப் பார்வையிட அனுமதியில்லை என்றும், திங்கள்கிழமை முதல் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபியின் உடல், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீடு அமைந்துள்ள தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தந்தைக்கு நினைவு இல்லம் கட்டப்படும் என்று, எஸ்பிபியின் மகன் சரண் ஏற்கனவே அறிவித்திருந்தார். கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக, நினைவிடத்தைப் பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்காலிகமாக பொதுமக்கள் உள்ளே வந்து வெளியே செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, நேற்றும்(அக்.1), இன்றும்(அக்.2) இரு தினங்களுக்கு மட்டும் பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அவரது புகைப்படம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரண்டாவது நாளாக, அவரது ரசிகர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து நினைவிடத்தைப் பார்வையிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தி, புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். பிரபல திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் எஸ்பிபியின் நினைவிடத்தில் வைக்கப்பட்ட படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு எஸ்பிபியின் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் பொது மக்கள் வழக்கம் போல் நினைவிடத்தைப் பார்வையிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.