திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உளுந்தை ஊராட்சியில் மெர்குரி பிரிசியஸ் புரோடக்ட் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கே பெண்கள் ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் அசோக், குமார், செல்வராஜ், பாபு உள்ளிட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழாவை அறிவித்திருந்தனர். இன்று(ஜன.9) அந்த விழாவை நடத்த முற்பட்டபோது நிரந்தர பணியாளர்களான முக்கிய நிர்வாகிகள் ஐந்து பேர் தொழிற்சாலை நிர்வாகத்தினரால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் மூ.வா. சித்தார்த்தன் தலைமையில் நிர்வாகிகள் அருண் கௌதம் தமிழினியன், எஸ் கே குமார் கைவண்டுர் செந்தில் இளஞ்செழியன் குட்டி ரமேஷ் மாருதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் அனுமதி மறுத்ததை மீறி பெயர் பலகை திறந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றினர். இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் தொழிற்சங்க நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். தொடர்ந்து போராடி பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தும் என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: கடலோர ஆராய்ச்சி கப்பல் அன்வேஷிக்கா நாட்டுக்கு அர்பணிப்பு