சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி துறைமுகத்தை சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழவேற்காட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
'மோடியின் பினாமி அதானி'
தொடர்ந்து இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "அதானி பணக்காரர் ஆனதற்கு மோடியின் மத்திய அரசு தான் காரணம். விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கி அதானி, அம்பானிகளுக்கு முதலீட்டை பெற்றுத் தரவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாட்டில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் என அனைத்தும் அதானிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.
நேரடியாக தம்மால் தொழில் நடத்த முடியாது என்பதாலே அதானியை வைத்து மோடி தொழில் செய்கிறார். மோடியின் பினாமி தான் அதானி" என குற்றஞ்சாட்டினார்.
இந்தியா விற்பனைக்கு:
தொடர்ந்து பேசிய அவர், "ஆஸ்திரேலியாவில் இருந்து காட்டுப்பள்ளியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள துறைமுகத்திற்கு நிலக்கரியை கப்பல் மூலமாக கொண்டு வந்து தொழில் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றாமல் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற்றி மக்களே வெளியேறும் சூழலை உருவாக்குகிறார்கள். சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் அதானி துறைமுகத்தை மையப்படுத்தியே கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் இந்தியா விற்பனைக்கு என்ற விளம்பர பலகையை மட்டும் தான் வைக்கவில்லை"என்று சாடினார்.
இதையும் படிங்க: பாஜக அநாகரிக அரசியலை செய்துவருகிறது - தொல். திருமாவளவன்