திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரையும், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகிய இருவரையும் ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூரில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "மத்தியில் ஆட்சி செய்யும் மோடி எந்த ஒரு திட்டத்தையும் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஒரு கோடி பேருக்கு வேலை எனக்கூறி,10 கோடி பேருக்கு வேலை இழப்பை ஏற்படுத்தினார். வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடுவதாக கூறி மக்களுக்கு நாமம் போட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மக்களை ஏழைகளாக்கி தெருவில் நிற்க வைத்தார். அதே போல், ஜிஎஸ்டி வரி மூலம் வணிகர்களையும் வீதியில் நிற்க வைத்தார். தமிழகத்தில் அவருக்கு அடிமையாக இ.பி.எஸ் மற்றும்ஓ.பி.எஸ் உள்ளனர். இவர்களை, ஒன்னும் தெரியாத மண்ணு முதலமைச்சர் என்றும், டயர் நக்கி ஓ.பி.எஸ் என்றும் கூறிய அன்புமணி ராமதாஸ் இன்று அவர்கள் கூட்டணியில் உள்ளார்.
புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் மோடி ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும். தமிழ்நாட்டின்முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி வந்த ஓ.பி.எஸ், துணை முதலமைச்சர் பதவி கிடைத்ததும் அதை மறந்து விட்டார். 90 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்தார். தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த நிலை மாற மத்திய, மாநில தற்போதைய ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " திமுக தேர்தல் அறிக்கை இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ், சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை குறைப்பு நடவடிக்கை உள்ளிட்டவைகளை மக்கள் அதிகளவில் வரவேற்றுள்ளனர். அதே போல் ராகுல்காந்தி 25 கோடி குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த திட்டமும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, மத்தியில் ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் " என தெரிவித்தார்.