திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி கடந்த 20 ஆண்டுகளாக பொது பிரிவாக இருந்த நிலையில், கடந்தாண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது தனி பிரிவாக மாற்றப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில், அமிர்தம்வேணு என்பவர் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றார்.
கடந்த எட்டு மாதங்களாக இவரை ஊராட்சி மன்ற தலைவராக பணி செய்ய விடாமல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ், துணைத் தலைவர் ரேவதி விஜயகுமார் மற்றும் ஊரட்சி செயலர் சசிக்குமார் ஆகியோர் தடுத்து வந்துள்ளனர். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வெளியே இவரது பெயரை கூட எழுதவிடாமல் பெயர் பலகை காலியாகவே உள்ளது. குடியரசு, சுதந்திர தினங்களில் கூட ஊராட்சி மன்ற தலைவர் தலித் என்பதற்காக தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்துள்ளனர்.
இது குறித்து புகார் எழுந்த நிலையில், இதை செய்தி சேகரிப்பதற்காக தனியார் தொலைக்காட்சி நிருபர் எழில், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று காட்சிகளை சேகரித்துள்ளார். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் விஜயகுமார் மற்றும் ஊராட்சி செயலர் சசிக்குமார் ஆகியோர் நிருபரை தாக்கி அவரது செல்போனை பறித்துக் கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் பூட்டி சிறை வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று நிருபரை மீட்டனர். மேலும், காவல்துறையினர், வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து இருவரை கைது செய்தனர்.