திருவள்ளூர்: மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம், முருகம்மாள் ஆகியோரின் மகள் , இன்று விடுதியில் இருந்து காலை வழக்கம் போல் பள்ளிக்குச்செல்ல சீருடை அணிந்து சகத்தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் சகத்தோழிகள் உணவு அருந்தச் சென்றநிலையில், தனியாக இருந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்தப் பள்ளிக்கு இன்று (ஜூலை 25) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன் காவல் துணை ஆய்வாளர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிசி கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து விடுதியில் மற்ற மாணவர்களுடைய பெற்றோர் விடுதியை முற்றுகையிட்டு, 'எங்களுடைய பிள்ளைகளைக் காண வேண்டும்’ என்று முழக்கங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண்; காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக அதிரடி படை வீரர்கள் இறக்கப்பட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையாளர்களை நெருங்கும் போலீசார் - விசாரணை தீவிரம்!