திருவள்ளூர் மாவட்டம் மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (35). இவர் தனது மனைவி சங்கீதாவை அழைத்து வர வீரராகவபுரம் கிராமத்திற்கு நேற்று (மார்ச்15) சென்றுள்ளார். அங்கிருந்து இன்று காலை தனது மனைவி சங்கீதா (30) மற்றும் கனிஷ்கா (7), தருண் குமார் (3) ஆகிய இரண்டு குழந்தைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் அருகே சென்றபோது இவர்கள் பயணித்த வாகனத்தின் மீது பின்னால் வந்த மணல் லாரி மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த ஜெகதீஷ் மற்றும் அவரது மகள் கனிஷ்கா மற்றும் மகன் தருண்குமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த திருவள்ளூர் டிஎஸ்பி துரைபாண்டியன் மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைப் பிடித்த பொதுமக்கள், அவரை சரமாரியாக தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இச்சம்பவத்திற்கு காரணமாக ஓட்டுநர் நாராயணன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க:ஜெயலலிதா மரண வழக்கு: முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்!