திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கணிப்பாய்வு அலுவலர் மணிவாசகம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் முன்னிலையில் அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மழைநீர் செல்லக்கூடிய ஆறுகள், குளங்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும், தாழ்வான, பாதிக்க வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்குள்ள மக்களுக்கு உணவு பொருட்களை பாதுகாப்பான இடங்களில் சேகரித்து வைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை, நடமாடும் மருத்துவ குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மின்சார இடையூறுகளை பழுதுபார்க்க மின் ஊழியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டோரை தங்க வைக்க தேர்வு செய்துள்ள இடங்களில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குடிநீரை கொண்டு செல்வதற்கான வாகனங்கள், ஜெனரேட்டர், பம்பு செட்டுகள், மரங்களை அறுக்கும் இயந்திரம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற ஆலோசனைகள் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.