நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சுற்றித் திரிவதாகவும், ஒரு கூட்டம் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் ட்ரோன் கேமரா மூலம் திருவள்ளூர் நகரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது திருவள்ளூர் அடுத்த வள்ளுவர்புறத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ட்ரோன் கேமராவைக் கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அதேபோல் பெரும்பாக்கம் பகுதியில் தாயம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களும் கேமராவைக் கண்டதும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
இதையும் படிங்க: ட்ரோனுடன் ஓர் கண்ணாம்பூச்சி: திருப்பூர் பாய்ஸை ஓவர்டேக் செய்த சேலம் பாய்ஸ்
இதனைத் தொடர்ந்து ஜெயின் நகர் மற்றும் பூங்கா நகரில் இளைஞர்கள் கிரிக்கெட் ஆடும்போது ட்ரோன் கேமரா படம் பிடித்ததை அறிந்து அங்கிருந்த வீட்டுப்பகுதிகளில் சென்று பதுங்கிக்கொண்டனர். கேமராவைக் கண்டதும் ஓட்டம்பிடித்த பகுதிக்கு நகர காவல் துறையினர் நேரில் சென்று எச்சரித்து வந்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட காணொலியை நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடி வசனங்களை வைத்து பக்காவாக எடிட் செய்து காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்தக் காணொலி இணையத்தில் ஹிட்டடித்துள்ளது.
இதையும் படிங்க: துரத்தி வந்த ட்ரோன்! தெறித்து ஓடிய இளைஞர்கள்!