திருவள்ளூர் அடுத்த காக்களுர் ஏரிக்கரை அருகே இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக சரவணன், ஆனந்தன் என்பவர்களும் விற்பனையாளர்களாக பாபு, சுரேந்தர் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் வேலை முடிந்து ஊழியர்கள், கடையை பூட்டி விட்டு சென்றனர்.
பின்னர் இன்று மதியம் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுபான பாட்டில்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனே ஊழியர்கள், தங்களது உயர் அலுவலர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் கடையின் இருப்பை ஆய்வு செய்தபோது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மொத்தம் 182 மதுபான பெட்டிகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. நேற்று விற்பனை கணக்கை முடித்துவிட்டு இரவு 10.30 மணிக்கு பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
இதையடுத்து நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு மதுக்கடையின் பூட்டை உடைத்து 182 மதுபான பாட்டில்களை மட்டும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்தும், சுவற்றில் துளையிட்டும் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இதே டாஸ்மாக் கடைகளில் மூன்றாவது முறையாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.