திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர், எம்ஜிஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர், சுத்தமாகும் நீரைத் தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு விற்றுவிட முதலில் நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்படாததால், தொழிற்சாலை நிர்வாகத்தினர் தண்ணீரை வேண்டாம் என கூறிவிட்டனர். இதன் விளைவாக முறையாகச் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் திறந்தவெளியில் விடப்படுகிறது.
இதனால் நிலத்தடி நீர் மாசடைவதாகக் கூறி காக்கலூர், வெங்கத்தூர் ஆகிய ஊர்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று காலை திருவள்ளூர் நகராட்சி ஆணையர், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயல் பொறியாளர், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் குறித்தும் அதன் வெளியில் விடப்படும் தண்ணீர் குறித்தும் நேரில் ஆய்வு செய்தனர். கழிவுநீரை முறையாக ஆய்வுசெய்யாத வரையில் தங்களது எல்லைக்குட்பட்ட ஏரிகளில் விடக்கூடாது என அலுவலர்களிடம் காக்களூர், புட்லூர் ஊராட்சிமன்றத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படியுங்கள்: பருவ மாற்றங்களை கண்டறியும் செயற்கைக்கோள்! பள்ளி மாணவிகள் அசத்தல்!