திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் கொசஸ்தலை ஆற்றில் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அங்கு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி, அதன் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 2,886 மில்லியன் கன அடியும், மொத்த உயரமான 35 அடியில் 34 அடியும் எட்டியுள்ளது. அதேபோல் நீர்வரத்து 3,167 கன அடியாக உள்ள நிலையில், விநாடிக்கு 3,907 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரியிலிருந்து தற்போது 7 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கொசஸ்தலை ஆற்றில் அணையின் அருகே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் நம்பாக்கம், ராமஞ்சேரி, பேணலூர்பேட்டை, நயபக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் தரைப்பாலத்தில் நடந்து சென்றும் இருசக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் அந்த பகுதியை ஆற்றை கடந்து வருகிறார்கள்.
முன்னதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கைவிடுத்தும் சிலர் அலட்சியமாக செயல்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் உயர்மட்ட பாலத்தை விரைவில் கட்டிமுடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை