திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம், ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர் மாதா குப்பம் ஆகிய கிராமங்களுக்கு இடையே பிரச்னை நிலவி வருகிறது.
கடலில் மீன் பிடிப்பதை பிரதானத் தொழிலாக கொண்ட கூனங்குப்பம் மீனவர்கள், பாரம்பரியமாக பழவேற்காடு ஏரியில் நண்டு வலை வீசுவதாகவும், அதற்கு ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கிராமத்தை காலி செய்து ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பு மீனவர்களையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சார் ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கூனங்குப்பம் கிராமத்தைக் கண்டித்து, ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம் உள்ளிட்ட 12 மீனவ கிராம மக்கள் போராட்டம் நடத்த உள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து, வட்டாட்சியர் செல்வகுமார் நேரடியாக சென்று கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் 12 மீனவ கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பழவேற்காடு ஏரியில் கூனங்குப்பம் மீனவர்கள் நண்டு வலை வீச தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை 12 மீனவ கிராம மக்கள் ஆட்சியரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் பழவேற்காடு ஏரியில் பாரம்பரியமாக நண்டு வலை வீசுவதாக கூனங்குப்பம் மீனவர்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
இரு தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவில் சுமூகமான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இரு தரப்பு மீனவர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயலால் என்ன நடக்கும்? - வானிலை ஆய்வு மையத்தின் முழு தகவல்!