திருவள்ளூர் மாவட்டம் சிற்றம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் எட்டியப்பன். இவருக்கும் மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகள் சின்னம்மாள் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
இந்நிலையில், இன்று காலை சின்னம்மாள் கணவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகள் இறந்த செய்தியறிந்து வந்த சின்னம்மாளின் தந்தை, கடம்பத்தூர் காவல் நிலையத்தில் தனது மகள் இறப்பில் சந்தேகமிருப்பதாகக் கூறி, எட்டியப்பன் அவரது தந்தை கங்கன், தாயார் ரவி அம்மாள் ஆகியோர் மீது புகாரளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சின்னம்மாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் மீன் வியாபாரம் செய்து வரும் எட்டியப்பனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததன் காரணமாக கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் எட்டியப்பன், அவரது தந்தை, தாய் ஆகியோரை கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வீட்டுச்சுவர், எடை இரும்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றில் ரத்தக்கரை இருப்பதைக் காவல் துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் நகை திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!