திருவள்ளூர்: காக்களூரில் திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான த.எத்திராஜ் தலைமை தாங்கினார்.
இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசும் போது,”திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம். ஆதனால் தமிழகத்தில் திமுக எஃகு கோட்டையாக இருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பிஜேபியினர் அந்தந்த மாநில மொழிகளில் பேசி ஊருடுவி வருகின்றனர். அதே போல் பாரதப் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திருக்குறளை சொல்லியதால் அவர் தமிழுக்கு தொண்டாற்றியதாக பிஜேபியினர் தெரிவித்து வருகின்றனர்.
உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க, திமுகவுக்கு பிஜேபி வலை வீசி வருகிறது. ஆனால் பிஜேபியால் தமிழகத்தில் ஊடுருவ முடியாத நிலை தற்போது நிலவி வருகிறது. மத்திய அரசுடன் வளைந்து கொடுத்து செல்லாமல் தமிழ்நாட்டை திறம்பட வழிநடத்தி செல்வதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் பார்த்து பெருமைப்படக்கூடிய அளவுக்கு நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாகவும் புகழாரம் சூட்டினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து நாட்டு மக்களிடையே தமிழக அரசு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக அபார வெற்றி பெறும். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக திமுக விளங்குகிறது. நவம்பர் 27-ந் தேதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிட வேண்டும்”என்றார்.
இதையும் படிங்க: வாய்ப்புக் கிடைத்தால் ஓபிஎஸ்சை சந்திப்பேன் - டிடிவி தினகரன்