திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான்கு ஆயிரத்து 694 நபர்களுக்கு ரூ.57.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் முனைவர் இல. சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்திவருகிறார். கரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து நம் மாநிலத்திற்குள் நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.
ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2020 வரையிலான ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டன.
இது மட்டுமின்றி அனைத்து குடும்ப அட்டைகளிலும் இணைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் வழங்கும் பணியும் நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரடங்கு காலத்திலும், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல தொழில் துறையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அதிமுக ஆட்சியில்தான் புதுப்பொலிவு பெற்றுள்ளது. முதலமைச்சரின் அறிவுரைப்படி பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.