திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த திருத்தணி, திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு சுமார் 140 தொழிலாளர்கள் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 36 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை ஆலை நிர்வாகம் தற்போதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை.
அதுமட்டுமின்றி, ஆலையில் உள்ள 504 காலிப்பணியிடங்களையும் நிரப்பி, அவர்களையும் நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், இவர்களது போராட்டத்தை ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளாததால், நேற்று (அக் 20) ஆலையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவலங்காடு ஊராட்சிமன்றத் தலைவர் ரமேஷ் மற்றும் காவல் துறையினர் ஆர்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.