திருவள்ளூர்: திருவேற்காடு நகராட்சியில் உள்ள வீரராகவபுரம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியினர் இனத்தைச்சேர்ந்தவர்கள் வாகனத்தில் கிராமம் கிராமமாக சென்று கேஸ் அடுப்பு பழுது பார்க்கும் தொழிலை செய்து வருகின்றனர்.
இவர்களில் யாரும் இதுவரை பட்டப்படிப்பு படித்ததில்லை. இந்நிலையில், தங்களது மகள்களை கல்லூரி வரை படிக்க வைத்துள்ளனர். கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தாங்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தங்களுக்கு இந்து பழங்குடியினர் என்ற சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கூறி வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என கடந்த ஏழு ஆண்டுகளாக அலைந்து திரிகின்றனர்.
பள்ளி மாற்றுச்சான்று மற்றும் அவர்களிடம் உள்ள உறவினர்களின் சாதிச்சான்று போன்ற பல்வேறு ஆவணங்களை அலுவலர்களிடம் சமர்ப்பித்தும் இதுவரை பல்வேறு காரணங்களைக்கூறி அலுவலர்கள் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர் நாள் கூட்டத்திலும் பல மனுக்கள் கொடுத்தாகி விட்டதாகவும்; இது போல் மனு கொடுக்க வரும் போதெல்லாம் தங்களது வருமானம் இல்லாமல் போய்விடும் என கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திலும் மனுக்களைக் கொடுத்துள்ளனர். எனவே, தங்களுக்கு பழங்குடியினர் இந்து என்ற சாதிச்சான்றிதழை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; இந்த ஏழை பெண்களின் குரல் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேட்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.