சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபி (15). சிறுவன் கோபி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளான். விடுமுறை நாட்கள் என்பதால் நண்பர்களுடன் நேற்று (மே 25) மதியம் வீட்டில் இருந்து குளிக்க வெளியில் சென்றுள்ளான். தாம்பரம் மீஞ்சூர் சாலை ஒட்டியுள்ள பாலவேடு பகுதியில் நாராயணன் என்பவருக்குச் சொந்தமான பயன்பாடற்ற கிணறு ஒன்று இருந்துள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் என பெரும்பாலோனோர் இந்தக் கிணற்றில் குளிப்பது வழக்கம். இதனைக் கண்ட கோபியும் அவனது நண்பர்களும் கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். தண்ணீரை பார்த்த உற்சாகத்தில் கோபி முதலில் கிணற்றில் குதித்துள்ளான். கோபிக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. நீச்சல் தெரியாத கோபியால் மேலே வரமுடியாமல் தவித்துள்ளான். அவனுடன் வந்த நண்பர்களுக்கும் நீச்சல் தெரியாததால் கோபியைக் காப்பாற்ற முடியாமல் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதனையடுத்து பயந்துபோன நண்பர்கள், கோபியின் வீட்டிற்கு தகவல்கள் தெரிவித்தனர். கோபியின் குடும்பத்தார் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் மூன்று மணிநேரமாக போராடியும் உடலை கைப்பற்றமுடியவில்லை. பின்னர் இறுதியாக ராட்சத மோட்டார் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்த தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி கோபியின் உடலை மீட்டனர்.
இது குறித்து முத்தாபுதுப்பேட்டை ஆய்வாளர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கிணற்றில் குளிக்கச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கக்கன்ஜி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பயன்பாட்டில் இல்லாத கிணறுகளை மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.