திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே அதம்பார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). அவருடைய மனைவி மேகலா. இவர்களுக்கு உதயகுமார், மணிகண்டன், ரமேஷ் என மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கோவிந்தராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான எட்டு ஏக்கர் விவசாய நிலங்களைத் தனது மூன்று மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளார்.
சொத்துக்களை பிரித்துக் கொடுத்ததை அடுத்து மூன்று மகன்களும் தந்தை கோவிந்தராஜனை வீட்டைவிட்டு அடித்து விரட்டி விட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கடந்த மூன்று வருடங்களாக தான் பிச்சை எடுத்து உணவு உண்டு வந்ததாகவும், தனக்கு உணவளிக்குமாறு தன் மகன்களிடம் கேட்டபோது அவர்கள் துன்புறுத்தியாதவும் கூறி நன்னிலம் காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால், அதுகுறித்து கவால்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற கோவிந்தராஜ், வயதான காலத்தில் தன்னை கவனிக்காமல் அடித்துத் துன்புறுத்தும் தன் மூன்று மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது சொத்துக்களை மீட்டுத்தரக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.