திருவள்ளூர்: பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கோயிலுக்கு செல்லும் முக்கிய பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை வருகின்ற 12 ஆம் தேதிக்குள் அகற்ற கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன்னறிவிப்பின்றி நடவடிக்கை
இன்று முன்னறிவிப்பு ஏதும் இன்றி அலுவலர்கள் நோட்டீஸ் ஏதும் வழங்காமல் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் உடன் வந்து ஜேசிபி எந்திரம் மூலம் கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வணிகர்கள் ஜேசிபி எந்திரத்தை சிறைபிடித்து அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நீதிமன்ற உத்தரவை வழங்காமல் தன்னிச்சையாக முன்னறிவிப்பு இன்றி கடைகளை எப்படி அகற்றலாம் என்று கேள்வி எழுப்பினர்.
போராட்டத்தால் பரபரப்பு
மேலும் மாதம்தோறும் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகத்தில் கடைக்கான வாடகையை செலுத்தி வருவதாகவும் கோயில் நிர்வாகத்திற்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் உரிமம் இல்லாத இடத்தில் உள்ள கடைகளை எப்படி அகற்றலாம் என அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர்.
வணிகர்களின் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி - மிசோரம் மாநில கலெக்டர்