தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்து விடுமுறை காலங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆண்டுதோறும் ஆய்வு நடத்துவது வழக்கம். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் தரம் குறித்த ஆய்வு அந்தெந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெற்றது. திருவள்ளூர், ஊத்துக்கோட்டையில் உள்ள 69 தனியார் பள்ளிகளில் மொத்தம் 259 வாகனங்கள் உள்ளன.
இந்நிலையில், திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மைதானத்தில் இன்று ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அனைத்து வாகனங்களிலும் முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், அவசரகால கதவு ஜன்னல்கள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட 16 அம்சம் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. மேலும் இந்த ஆய்வுப்பணி வரும். 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பாதுகாப்பு அம்சம் இல்லாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.