திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே நத்தம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பாடப்பிரிவு ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் எளாவூரைச் சேர்ந்த பாபு. இவரை பள்ளிக் கல்வித்துறை திடீரென பணியிடமாற்றம் செய்தது. அவருக்கு பதிலாக சுதா என்பவர் ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் பணிக்கு வராமல் மருத்துவ விடுப்பில் சென்றதால் ஆங்கிலப் பாடம் கற்க முடியாமல் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இதையடுத்து, பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் பாபுவை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித் துறை அலுவலர்களுக்கு மனு அளித்திருந்த நிலையில், அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், ஆங்கில ஆசிரியரின் பணியிடை மாற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளி வளாகத்தில், இன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் உடனிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர், சம்பவம் இடம் விரைந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எளிமையான முறையில் கிராமப்புற மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பவர் என்பதால் அவரை மீண்டு பணி அமர்த்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.