திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கங்களுடன் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் நேற்று (ஜனவரி 8) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சதீஷ், சத்தியமூர்த்தி, சவுகார்பாண்டியன், தாமரைபாக்கம் மணிகண்டன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகளுக்கு ஆலோசனை
லாரிகளில் அரசு அனுமதித்துள்ள எடையைத் தாண்டி அதிக அளவில் சரக்குகள் ஏற்படுவதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் அரசு நிர்ணயித்துள்ள எடையை ஏற்றும் அளவிற்கு மணல் மற்றும் கனரக லாரிகளின் உயரம் இருக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே லாரிகளில் உள்ள அதிகப்படியான உயரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் மோகன், பன்னீர்செல்வம், லீலாவதி ஆகியோர் சங்க நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
குவாரிகளை சோதனையிட வேண்டும்
இதனையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய லாரி உரிமையாளர்கள், ஏற்கனவே லாரிகளில் உள்ள உயரத்தை நீக்குவதற்கு குறிப்பிட்ட காலம் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னர் வைத்தனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சதீஷ், "விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க லாரி உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குவாரிகளிலும் தமிழ்நாடு அரசு சோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் லாரியின் உயரத்தைக் குறைக்க ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்தில் ஜன.21 பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு