சேலம்: சேலம் அருகே வலசையூரைச் சேர்ந்தவர் சபரிசங்கர். இவர், அம்மாபேட்டையை தலைமையிடமாக வைத்து, எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் நகைக் கடை நடத்தி வருகிறார். தொடர்ந்து, நகை சீட்டு, பழைய நகைக்கு புதுசு, முதலீடுக்கு 2.50 ரூபாய் வட்டி என பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார். இத்தகைய திட்டங்களை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
அதன் மூலம் அதிகளவில் வருமானம் கிடைத்ததால் சேலம் மட்டுமின்றி தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கிளைக் கடைகளை சபரி சங்கர் திறந்துள்ளார். தொடர்ந்து, தீபாவளி நகை சீட்டு உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து நகை, பணம் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்துள்ளார்.
பின்னர், திட்டங்கள் முதிர்வு பெற்ற நிலையில், முதலீட்டாளர்களுக்கு புது நகைகள், பணம் ஆகியவற்றை தராமல் நகைக் கடைகளை மூடிவிட்டு சபரிசங்கர் மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்ட 4 பேர் கடந்த ஆண்டு 2023-ல் தலைமறைவாகியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சேலத்தில் மட்டும் ரூ.8 கோடி மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மோசடி, கூட்டு சதி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் சபரிசங்கர் உட்பட 5 பேர் மீது கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: 'எண் ஒன்பதை அழுத்தவும்'... ரூ.4.67 கோடியை அபேஸ் செய்த கும்பல்.. சென்னையில் அதிர வைக்கும் சைபர் அரெஸ்ட் மோசடி!
இவர்கள் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் வரையில் 546 பேர் புகார் அளித்துள்ளனர். அதன் மூலம் தமிழகம் முழுவதும் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததும், அந்த பணத்தில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவித்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, கடந்த மே மாதம் சபரி சங்கரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நகை கடைகளுக்கு முதன்மை அதிகாரியாக செயல்பட்ட ஆட்டையாம்பட்டி ராஜூவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன், மார்க்கெட்டிங் மேலாளர் பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த மோசடியில் தலைமறைவாக உள்ள கவின் மற்றும் அஜித் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கவின் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்