திருவள்ளூர்: பிடி கட்டளையை நிறைவேற்றச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயன்ற குற்றத்திற்காக ஏ ப்ளஸ் ரவுடி மீது அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள சடையங்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். ஏ ப்ளஸ் ரவுடியான இவர் மீது திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையம், தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம், திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம் ஆகியவற்றில் இரண்டு கொலை மற்றும் 3 கொலை முயற்சி என மொத்தம் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தனது அத்தை மகனான ராஜ்மோகன் என்பவரை காரில் கடத்தி கொலை செய்த வழக்கில் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, மத்தியச் சிறையில் பாதுகாப்புப் பணியிலிருந்த பாதுகாவலரைத் தாக்கிய வழக்கில், திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டைச் சிறைக்கும் மாற்றப்பட்டார்.
இதனையடுத்து, 2023ல் நீதிமன்ற பிணையில் வந்தவர், தனது அத்தை மகனும் கொலை செய்யப்பட்ட ராஜமோகனின் தம்பியுமான பாலகிருஷ்ணனை தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள வழக்கில், தொடர்ந்து மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததினால் இவர் மீது பிடி கட்டளை பிறப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் நிலுவையிலிருந்தது.
இந்நிலையில், நேற்று (டிச,24) அரித்துவாரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர் சிவானந்தம் ஆகிய இருவரும், வலங்கைமான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்வகுமாரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்பொழுது காவல் அதிகாரியைப் பார்த்த செல்வகுமார், அவர்களை அரிவாளால் தாக்க முற்பட்டுள்ளார்.
தொடர்ந்து, காவலர்கள் இருவரும் செல்வகுமாரைப் பிடிக்க முற்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பித்து ஓடிய அவர் வெட்டாத்து பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் செல்வகுமாரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல் தரப்பில் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், பிடி கட்டளையை நிறைவேற்றச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை கையால் தாக்கி, வீச்சரிவாளால் தாக்க முயன்ற குற்றத்திற்காக செல்வகுமார் மீது அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திராவிட மாடலா..? திண்டாடும் மாடலா..? - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி