திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் ஊராட்சிக்கு உட்பட்ட அகூர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை வேறு பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் காலனி மக்கள் கடந்த 6 மாதங்களாக குடிநீருக்காக கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து பலமுறை காலனி மக்கள் குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருத்தணி சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் பேருந்து நிலையத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த திருத்தணி காவல்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதியளித்த பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.