திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட அதிகத்தூர் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தப் பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள், பொதுமக்கள் தங்களது நிலத்தை வழங்கினார். அப்போது, இடத்தை வழங்கிய குடும்பங்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த தனியார் தொழிற்சாலையானது, ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டது. புதிய நிர்வாகம் வந்தவுடன் நிலம் வழங்கிய உள்ளூர் கிராம மக்களை உடனடியாக பணி நீக்கம் செய்தது. இதைக் கண்டித்து சாலை மறியல் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வந்தனர். ஆனால், தனியார் தொழிற்சாலை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து, இன்று (பிப். 03) கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ் கண்ணன் தலைமையில் கிராம மக்கள் தொழிற்சாலைக்கு பூட்டு போடும் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டத்தில், சிபிஐ கட்சி நிர்வாகி கஜேந்திரன், மற்ற கட்சியைச் சேர்ந்த சரவணன், இஸ்மாயில், பாலயோகி, நா.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பணிநீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும் கண்டன கோஷம் எழுப்பினர்.
இது குறித்து தகவலறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை பாண்டியன் தலைமையிலான காவல் துறையினர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் மூலமாக உடனடியாக உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் தனியார் தொழிற்சாலை முன்பு ஒரு மணி நேரம் பதற்றம் நிலவியது.
இதையும் படிங்க: கரோனாவாவது கிரோனாவாவது...! - அதிகத்தூர் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்