திருவள்ளூர் மாவட்டம் குருத்தானம்மேடு கிராமத்தில் தமிழ்நாட்டில் எளிய விலையில் மருந்து பொருட்களைக் கையாளும் முனையத்தை பிரதான் மந்திரி பாரதிய ஜன்அவ்ஷாதி பரியோஜனா கிடங்கை, மத்திய அரசின் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதனாந்த கவுடா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
65 ஆயிரம் சதுர பரப்பளவுக் கொண்ட இந்த முனையத்திலிருந்து, மாநிலம் முழுவதும் மருந்துப்பொருட்கள் கொண்டு சென்று கையாள்வதன் மூலம், 50 முதல் 90 விழுக்காடு மருந்துப் பொருட்களின் விலை குறையும் எனத் தெரிவித்துள்ளார். இங்கிருந்து 900 மருந்துகள் 154 மருந்து உபகரணங்களும் விற்கப்படுகிறது என்றும், இந்தியா முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு 1500 மருத்துவர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
கிராமப்புற மக்கள் விலை குறைவாக மருந்துகளைப் பெற உதவுமென்றும், ஒரு ரூபாய்க்கு நாப்கின் விற்பனை திட்டத்தை டெல்லியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்தவர், இதன் மூலம் ஏழை சகோதரிகள் அதிகளவு பயன் பெறுவார்கள் என்றார். 100 நாட்களில் அனைவரிடமும் இத்திட்டம் சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குப் பாராட்டு சான்றுகளை வழங்கினார். மேலும், கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகளை வாகனத்தில் ஏற்றிக் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக் குமார், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.