திருவள்ளூர்: பூண்டி ஒன்றியத்திற்குள்பட்ட பூண்டி கிராமத்தில் 50 விழுக்காடு இந்து மக்களும், 50 விழுக்காடு கிறிஸ்தவ மக்களும் வாழ்ந்துவருகின்றனர். பூண்டி பேருந்து நிலையத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் ஆறு அடி உயரமுள்ள மாதா சிலை கிறிஸ்தவர்களால் நிறுவப்பட்டது.
இந்தச் சிலைக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இந்துக்களும் மாதாவை வணங்கி நேர்த்திக்கடன் செய்துவந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (செப். 30) காலை பொதுமக்கள் பார்த்தபோது மாதா சிலையின் தலை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு சிலையை சாக்குப்பை கொண்டு மூடிவைத்தனர்.
மாதா சிலையைச் சேதப்படுத்தியவர்களைக் கண்டறிந்து கைதுசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதையும் படிங்க: அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த முதலமைச்சர்