வேலூர்: காட்பாடி சேர்க்காடு பகுதியில் தமிழக அரசுக்குச் சொந்தமான திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்கள் அடங்கிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இந்த பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரையில், சுமார் ரூ.300 கோடி அளவில் ஊழல்கள் நடைபெற்றுள்ளது என முன்னாள் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத் தலைவருமான பேராசிரியர் இளங்கோ, இந்த ஊழல்களை தில்லு முல்லு என்ற பெயரில் 420 பக்கங்கள் கொண்ட புத்தகமாக தொகுத்துள்ளார். இந்த ஊழல் புத்தகம் திருவள்ளுவர் பல்கலைக்கழக நுழைவாயிலில் வெளியிடப்படும் என ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், காவல்துறையினர் இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்துள்ளனர் எனவும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள், ஊழல்கள் புத்தகமாக வெளியாவதைத் தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் கோவை, சேலம், சென்னை, வேலுர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பேராசிரியர்களும், தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த புத்தகத்தை வெளியிடக்கூடாது என காவல்துறையினர் தடுத்ததால், புத்தகங்களை கையில் ஏந்தி பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேராசிரியருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் தேர்வு முறைகேடுகள், ஒப்பந்த முறைகேடு, பட்டங்கள் கள்ளத்தனமாக விற்பனை, ஆளுநர் கையொப்பமிட்டதை மாற்றி, பதிவையும் மாற்றி பட்டங்களைக் கொடுத்தது மாணவர்களை பாஸ் செய்ய வைத்தது, தேர்வில் தோல்வி அடைந்தவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தேர்ச்சியடைய வைத்தது உள்ளிட்ட 22 முறைகேடுகள், ஊழல்கள் இந்த புத்தகத்தில் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் இளங்கோ, “திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுபாடு அலுவலர் ஆகியோர் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்துக் கொண்டு மாணவர்கள் நலனுக்கு எதிராக, பெற்றோர் நலனுக்கு எதிராக, கல்வி நலனுக்கு எதிரான ஊழல் பெயர்களைப் பற்றி 420 பக்கங்கள் கொண்ட திருவள்ளுவர் பல்கலைக்கழக தில்லு முல்லு என்ற புத்தகத்தை வெளியிட இருந்தோம்.
ஆனால், திருவளம் காவல்துறையினரும், காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் இந்த நூல் வெளியீட்டுக்கு தடை விதித்துள்ளனர். இந்த புத்தகம் செய்தியாளர்களுக்கு தகவலுக்காக மட்டும் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை விதித்த தடையை எதிர்த்து குறிப்பாக, திருவளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மீதும், காட்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் மீதும், திருவளம் ஆய்வாளர் மீதும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து முறையான அனுமதி பெற்று, இந்த ஊழலை அம்பலப்படுத்துவோம்.
காவல் துறைக்கு முதலமைச்சர் தலைமை தாங்குகிறாரா அல்லது திருவளம் காவல்துறையில் இருக்கக்கூடிய சிலம்பரசன் தலைமை தாங்குகிறாரா என்பது தெரியவில்லை. மேலும், பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் அமைச்சராக இருந்தபோது, 66 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்தார்.
தற்போது நாங்கள் 66 பேர் தெருவில் நிற்கிறோம். உயர் நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும், துணை வேந்தரான தங்கையா ஆறுமுகம் என்பவர் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார். சட்டபடி உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பின்னர் இந்த புத்தகம் வெளியிடப்படும்.
மேலும், இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையிலான அமைக்கப்பட்ட குழுவிற்கு, துணை வேந்தர் ஒத்துழைப்பு தராமல் இருப்பதாலும், தகவல் அளிக்காமல் இருப்பதாலும் இந்த புகாரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்ப குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். காட்பாடி காவல்துறை அரசுக்கு எதிராக செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, பேராசிரியர் இளங்கோ அளித்த புகாரில்தான் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்று (ஜன.3) அவர் பணிக்கு வரவில்லை என்று கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சிறைபிடிப்பு..பொதுமக்கள் சாலைமறியல்