திருவள்ளூர்: வெங்கல், புல்லரம்பாக்கம், பென்னலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்பிலான மின்வயர் திருட்டில் ஈடுபட்ட திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒப்பந்ததாரராக பகலில் மின்வயர்களை பொருத்துவதும், இரவு நேரத்தில் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு திருடுவதும் விசாரணையில் அம்பலம்.
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழானூர் துணை மின் நிலைய இளநிலை மின் பொறியாளர் சுப்பிரமணி என்பவர் கடந்த நான்காம் தேதி வயல்வெளிகளில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் மின் கம்பங்களில் இருந்து மின்வயர்களை மர்ம நபர்கள் துண்டித்து திருடி செல்வதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் வரை இருக்கும் எனவும் புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் துப்பாக்கியுடன் வலம் வந்த மான் வேட்டை கும்பல் கைது!
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பகெர்லா செபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஒதிக்காடு மற்றும் சித்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கீழானூர் துணை மின் நிலையத்தில் மின்வயர்களை மாற்றி அமைக்கும் ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரரும், திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளருமான ஆண்ட்ரூஸ் அலெக்சாண்டர் மற்றும் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஒதிக்காடு, சித்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, எழிலரசன் என்கிற சுனில், பிரவீன் குமார், சரத்குமார், யுகேஷ் உட்பட ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் காலை நேரத்தில் மின்வயர்களை மாற்றி அமைப்பதும், இரவு நேரத்தில் அவர்களே மின் ஒயர்களை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட திருவள்ளூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி திமுக செயலாளர் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட 6 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து மின் வயர்கள், வயர்களை கட் செய்ய பயன்படுத்தும் எந்திரங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மின் வயர்களின் மதிப்பு ரூ.15 லட்சம் என மின்சார வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதே போல் பென்னாலூர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள மின்கம்பங்களில் மின் வயர்கள் திருடப்பட்டுள்ள நிலையில் அது சம்பந்தமாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கட்சியில் சேரும் பெண்களை போட்டோ எடுத்து மிரட்டிய பாஜக நபர் கைது!