ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் வழியாக ஆவடி கனரக தொழிற்சாலைக்கு, புழல் ஏரியிலிருந்து நாள் ஒன்றிற்கு 10லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை திருமுல்லைவாயில் அடுத்த சிடிஎச் சாலையில், ராட்சத குடிநீர் குழாய் அழுத்தம் காரணமாக உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் ஓடியது. மேலும் ஐந்துக்கும், மேற்பட்ட கடைகளுக்குள்ளும் இந்த தண்ணீர் புகுந்தது.
இதனால் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஆவடி போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தினர். இதனையடுத்து, குடிநீர் வாரியத்திற்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து, குடிநீர் நிறுத்தப்பட்டது.
இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், “வருடத்திற்கு இருமுறை இவ்விடத்தில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. சி.டி.எச் சாலைக்கு அடியில் குழாய் புதைக்கப்பட்டுள்ளது. இது அறியமால் கனரக வாகனங்கள் அவ்வழியே செல்வதால் ஏற்படும் அழுத்தும் காரணமாக குழாய்களில் உடைப்பு ஏற்படுகின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழாய்கள் என்பதால், இதனை துறைசார்ந்த அலுவலர்கள் ஆய்வுசெய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.