திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சூரகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் செப் 30ஆம் தேதி நேர்காணலில் பங்கேற்று கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஊராட்சி செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டர்.
அதன் பின் அவருக்கு பணி வழங்காமல் இன்று வரை இழுத்தடித்து வருகின்றனர். இது தொடர்பாக கடம்பத்தூர் வட்டாட்சியரிடம் சென்று கேட்டபோது, உங்களது நேர்காணல் தள்ளுபடி ஆகிவிட்டது.
ஆகையால் நீங்கள் மீண்டும் நேர்காணலில் பங்கேற்று அதில் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே பணி வழங்கப்படும் என கூறியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சந்திரசேகர் இன்று தனது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறியுள்ளார்.
ஆனால், உண்ணாவிரதமிருக்க அனுமதி அளிக்க மறுத்த அவர், பணி வழங்க கடம்பத்தூர் ஒன்றிய ஆணையர் உத்தரவிடுவதாகக் கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்கார். அதனைத் தொடர்ந்து, சந்திரசேகர் தனது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து சந்திரசேகர் கூறுகையில், "தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின் படி முறையான நேர்காணலில் பங்கேற்று இம்மாதம் 6ஆம் தேதி பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், இன்று எனக்கு பணி வழங்காமல் எனது வீட்டிற்கு வந்து மீண்டும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விசாரித்தபோது அந்த பதவியை அதே கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதியினருக்கு வழங்க ஒன்றிய நிர்வாகத்தினர் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்தப் பணியை முறையாகத் தேர்வு செய்யப்பட்டு எனக்கு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் விடுதலை: கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்!