திருவள்ளூரில் நேற்று வெளியான விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கசவநல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ் என்பவர் வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, எதிரே அக்கிராமத்தைச் சேர்ந்த ருத்ரகிரி என்பவர் ஒன்றரை வயது பெண் குழந்தை பூஜாஸ்ரீ-யுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
திருவள்ளூர்- கடம்பத்தூர் நெடுஞ்சாலையில் பிரியாங்குப்பம் வந்தபோது, வேகமாக வந்த இன்பராஜின் இருசக்கர வாகனம் ருத்ரகிரி வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ருத்ரகிரி குழந்தை பூஜாஸ்ரீ, இன்பராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
பின்னர் படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதில் குழந்தை பூஜாஸ்ரீ மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.