திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியிலுள்ள மதுபானக் கடையின் பின்புறம் தாமரை ஏரிக்கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் ஒருவர், தலையில் கல்லைப் போட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து வந்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியில் பணிபுரியும் வட மாநிலத்தவர்களை அழைத்து வந்து உடலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த இளைஞர் யார் என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, காவல் துறையினர் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டிப் பகுதியில் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அதன் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இது முதல் அப்டேட் - ‘தளபதி 64’ களத்தில் விஜய் சேதுபதி!