திருவள்ளூர் மாவட்டம் தண்டலச்சேரி பகுதியில் அரசு மதுபான கடை இயங்கிவருகிறது. இன்று இக்கடை அருகே உடலில் ரத்த காயங்களுடன் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் கவரப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலை குறித்து காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்ததாகவும், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், நேற்று ஹோலி பண்டிகை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல் துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலையாளிகளை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை!