பழவேற்காடு அடுத்த மீனவர் பகுதியில் நடுக்குப்பம் எனும் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ். இவர் கடந்த ஆண்டு தங்கள் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பெயரில் காவல்துறையினர் நடுக்குப்பம் கிராமத்தில் சென்று சந்தேகத்தின் பெயரில் அப்பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
கிராம மக்கள் ரமேஷ் மீது கோபம் கொண்டு அவரை ஊரை விட்டு ஒதுக்கியதாகவும், பின்னர் ரமேஷ் தனியாக மீன்பிடித் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரமேஷுக்கும் கிராம நிர்வாகிகளுக்கும் பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பில் முடிந்தது. அப்போது ரமேஷ் மற்றும் அவருடைய தம்பி கார்த்திக்கும் தாக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் இருதரப்பினருக்கும் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதையடுத்து வாக்குவாதம் முற்றி அரிவாளால் வெட்டிக் கொள்ளும் அளவிற்கு பிரச்சனை முற்றியது. இதனால் ரமேஷ் மற்றும் அவரது தம்பி கார்த்திக் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பின்னர் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தகவல் குறித்து இரு தரப்பின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.