திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன்(27) பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை திருநின்றவூர் ஏரியருகே மாடு மேய்க்க சென்ற இவரது தாய் சுகுனா(49) மற்றும் தங்கை குமாரி ஆகிய இருவரும் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் கமலக்கண்ணன் ஊர் முழுவதும் தன் தாய், தங்கையை தேடி அலைந்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே திருநின்றவூர் ஏரியில் இரண்டு பெண் சடலங்கள் இருப்பதாக திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினருக்கு ஏரியில் இறந்து கிடப்பது வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுகுனா, குமாரி என்பது தெரியவந்தது. இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஏரியில் மாடு மேய்த்துக்கொண்டிருக்கும்போது, மாடுகள் ஏரிக்குள் சென்றதால் மாடுகளை விரட்ட குமாரி ஏரிக்குள் இறங்கியுள்ளார். அப்போது சேற்றில் சிக்கிய அவரை, காப்பாற்ற சுகனாவும் ஏரியில் இறங்கியுள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏரியில் மூழ்கி தாய், மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினியால் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடியாது - சீமான்